Sunday 16 April 2017

இரண்டாவது வருமானத்துக்கு 4 'நச்' யோசனைகள்!

"ஓடி ஓடி வேலை பார்க்கிறோம்... கிடைக்கிற வருமானம் எங்கே போகிறதென்றே தெரியவில்லை" என்பது எல்லோருக்கும் இருக்கிற பிரச்னைதான். சிலர் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பல குடும்பங்களில் ஒரே ஒரு வருமானம்தான். விற்கிற விலைவாசியில், மாறிவிட்ட வாழ்க்கைமுறையில் ஒரே ஒரு வருமானத்தை வைத்து காலத்தை ஓட்டுவது என்பது கடினமான காரியம். ஆனால் இந்தச் சூழலிலிருந்து அவர்கள் எளிதில் வெளியே வர ஒரு வழி இருக்கிறது. அது இரண்டாம் வருமானம். இரண்டாவது வருமானத்தை உருவாக்குவதன் மூலம் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இரண்டுதான். கூடுதல் உழைப்பும் திட்டமிடுதலும் தான்.
இரண்டாவது வருமானத்துக்கான வழிகளைப் பார்ப்பதற்கு முன் நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நம்முடைய பிரச்னைகள் என்னென்ன? நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறன் எந்தளவுக்கு இருக்கிறது? நம்மிடம் பணம் எவ்வளவு இருக்கிறது? இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் அடிப்படையில்தான் இரண்டாவது வருமானம் பார்ப்பதற்கான வழியை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். இப்போது இரண்டாவது வருமானத்துக்கு வழி செய்யும் யோசனைகளைப் பார்க்கலாம் வாங்க.
பங்குச் சந்தை:
நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி உங்களுடைய வருமானத்தில் அவசியமான செலவுகள் போக மீதி இருக்கும் பணத்தில் பாதியை அவசர தேவைகளுக்கு வைத்துக்கொண்டு மீதி பாதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பலர் சேமித்து வைக்கிறேன் என்று வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறார்கள். சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தினால் உங்களுக்கு அதிகபட்சம் 6 சதவிகித வட்டிதான் கிடைக்கும். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பணவீக்கத்தைத் தாண்டியும் அதிக வருமானத்தைப் பார்க்க முடியும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தெரியாதவர்கள், பங்குகளைத் தொடர்ந்து பின்பற்ற நேரமில்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் கணிசமாக உங்களுடைய முதலீடு வருமானம் கொடுக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் இதில் சாத்தியம்.
வணிகம்:
பொருட்களை வாங்கி விற்கும் வணிகத்தைச் செய்யலாம். குறைந்த விலையில் பொருட்களை வாங்கி, விலை ஏறும்போதோ அல்லது மதிப்புக் கூட்டுதல் செய்தோ விற்பனை செய்யலாம். இதன் மூலம் கணிசமாக இரண்டாவது வருமானத்தை ஈட்ட முடியும். இதற்கு நம்மிடம் யோசனையும் கொஞ்சம் பணமும் இருந்தால் போதும். குடும்பத்தினரின் உதவியுடன் ஸ்மார்ட்டாக பிசினஸ் செய்யலாம். பழைய பொருட்களையும் வாங்கி விற்கலாம். அதற்காக OLX, EBAY போன்ற தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறுதொழில்:
தொழில் யோசனைகள் இருப்பின் அதை செயல்படுத்தி பாருங்கள். வேலை பார்க்கும் நம்மால் தொழில் செய்ய முடியுமா என்று தயங்க வேண்டாம். நண்பர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ சேர்ந்து தொழிலைத் தொடங்கி நடத்துங்கள். அதற்கான முதலீட்டுக்கு சேமிப்பிலிருந்து எடுத்தோ அல்லது கடன் பெற்றோ ஆரம்பிக்கலாம். அவ்வப்போது தொழில் நிலவரம் குறித்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் வேலைக்குச் செல்பவராலும் சிறப்பாக தொழில் நடத்த முடியும்.
அறிவை காசாக்கலாம்:
இந்த டிஜிட்டல் யுகத்தில் நமக்கு உள்ள திறமைகளை வைத்து இரண்டாவது வருமானம் பார்ப்பது மிகவும் எளிது. யூடியூப் சேனல், டப்ஸ்மாஷ், பிளாக் போன்றவற்றில் நமக்கு திறமையும் ஆர்வமும் இருந்தால் அதனை ஓய்வு நேரங்களில் செயல்படுத்தி சம்பாதிக்கலாம். தொடர்ந்து இந்தத் தளங்களில் இயங்கி வந்தால், கூகுள்(google) கொடுக்கும் விளம்பர வருவாய் மூலம் வருமானம் வரும். மொழி அறிவு சிறப்பாக இருந்தால் மொழிப்பெயர்ப்பு பணி செய்வதன் மூலம் நன்றாக சம்பாதிக்க முடியும்.

Source: http://www.vikatan.com/news/miscellaneous/86526-4-simple-ways-to-make-additional-income.html
Contact: Pasumpon Balachandar
Email: balapatpg@gmail.com
Contact#: 89395 32104 / 98404 42019(call me at eve after 7.30 Pm or saturday and sunday)